புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் காய்கறி தோட்டம்: மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 28, 2015

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் காய்கறி தோட்டம்: மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக முன்மாதிரியாக 5 அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி, வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.மணிமேகலை ஆலோசனைப்படி, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களின் நுண்ணூட்ட சத்துப் பற்றாக்குறையை போக்கவும் அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்டத்தில் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதம்பாள், ஆலங்குடி, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கொத்தமங்கலம் மற்றும் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், முதல்கட்டமாக ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்ட தோட்டத்தில் கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை, பரங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய், அவரை, பாகற்காய் விதைகள் விதைக்கப்பட்டன. மேலும், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, முருங்கை கன்றுகளும் நடப்பட்டன.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சூசை தலைமையில் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் வி.ஆர்.சாமிநாதன், எஸ்.மதியழகன், கே.தனலட்சுமி ஆகியோருடன் பள்ளி மாணவர்களும் ஈடுபட்டனர். இவற்றின் விளைபொருட்கள் மாணவர்களின் மதிய உணவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment