ஆசிரியை பணியில் சேர தாமதம்; ஓய்வூதிய திட்டம் மறுப்பதா! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 26, 2015

ஆசிரியை பணியில் சேர தாமதம்; ஓய்வூதிய திட்டம் மறுப்பதா!

அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து, முசிறி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு இடமாறுதல் செய்ததில், 2 நாட்கள் தாமதமாக பணியில் சேர்ந்த ஆசிரியை பெயரை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர அனுமதிக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் சுஜாதா தாக்கல் செய்த மனு:அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தேன். முசிறி நாச்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு இடைநிலை ஆசிரியையாக, 2006 டிச.,2 ல் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் இடமாறுதல் செய்தார். 2006 டிச.,7 ல் பணியில் சேர்ந்தேன். அரசு தகவல் தொகுப்பு விபர மைய கமிஷனர்,&'முதலில் பணிபுரிந்த பள்ளியிலிருந்து விடுவித்த 2 நாட்களுக்குப் பின், தாமதமாக புதிய பணியிடத்தில் சேர்ந்துள்ளீர்கள். நல நிதி கணக்கில் தொடர்ந்து பிடித்தம் செய்ய முடியாது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்தான் அனுமதிக்க முடியும்,&' என மறுத்து உத்தரவிட்டார்.

அரசு உதவி பெறும் பள்ளியின் தாளாளர் வெளியூரில் இருப்பதாகக்கூறி, டிச., 4 மாலை 6 மணிக்கு பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். உடல்நிலையை கருதி ஓய்வெடுக்க வேண்டும், என டாக்டர் கூறியதை பொருட்படுத்தாமல், டிச.,7 ல் பணியில் சேர்ந்தேன். தகவல் தொகுப்பு விபர மைய கமிஷனர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, சுஜாதா மனு செய்திருந்தார்.

நீதிபதி டி.ஹரிபரந்தாமன்: மனுதாரருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதால், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அதற்கான காரணத்தை மருத்துவச் சான்றில் தெரிவித்துள்ளனர். ஓய்வூதிய விதிகளை புரிந்து கொள்வதில், அதிகாரிகள் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு வழக்கில் 10 நாட்கள் தாமதமாக பணியில் சேர்ந்தவருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் 2 நாட்கள் தாமதமாக பணியில் சேர்ந்ததற்கு விலக்களிக்கலாம். மனுதாரர் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. ஒரு பள்ளியிலிருந்து, வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். மனுதாரரை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர அனுமதிக்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் டி.லெனின்குமார் ஆஜரானார்.

No comments:

Post a Comment