சோம்பலை சாம்பலாக்குங்கள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 27, 2015

சோம்பலை சாம்பலாக்குங்கள்!

பலன் கிடைக்காமல் போனால் அதற்குக் காரணம் செய்த முயற்சியின் கோளாறே தவிர, வேறு காரணமல்ல. தகுந்த முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இப்படி பலனை அடையும் வரையில் இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் மிகவும் சொற்பம்.
எடுத்த முயற்சியில் ஊக்கத்தை கைவிடும் போதே
அங்கு தோல்வி மேகம் சூழ்கிறது! ஊக்கத்தைக் கைவிட காரணமாக இருப்பது, சோம்பல் மற்றும் உடனடி பலனை எதிர்பார்த்தல். சோம்பல் வருவதற்கான காரணங்களை ஆய்வு செய்து சாம்பலாக்காவிட்டால், அது நம் வாழ்க்கையைச் சாம்பலாக்கி விடும்! வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் எடுத்த முயற்சியிலே வெற்றி பெறவேண்டும், வெற்றிமாலைகள் விழவேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்?
நம்முடைய பலம் என்ன? பலவீனம் என்ன? நமக்கு எது வரும்? எது வராது? நம்மால் எது முடியும்? நம்மால் எது முடியாது? என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து பரிசீலித்து அதற்கேற்ற குறிக்கோளை நிச்சியத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே கனவு காண்பதில் எவ்வித பலனும் கிட்டாது. செயல்பாட்டுடன் கூடிய கனவு தான் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்.
நாம் தீவிரமாக பரிசீலித்துத் தேர்ந்தெடுத்த குறிக்கோளை மையப்புள்ளியாக வைத்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பூமி இயங்குவது நின்றால் உயிர்கள் வாழ முடியாது. நாம் உயிர்ப்புடன் செயல்படவிட்டால் குறிக்கோளும், வெற்றிக் கனவும் உயிர்ப்பு நிலைக்கு வராது.
அனைத்திற்கும் காரணம் மனமே:
சரியானபடி திட்டமிட்டு முயற்சி செய்யாதவர்கள் தோல்வியைத் தழுவும்போது, அதாவது வெற்றியைத் தவற விடும்போது விதியின் மேல் பழி போடுகிறார்கள். நம் தலைவிதி அப்படி இருந்தால் நாம் என்ன செய்ய முடியுமெனத் தளர்ந்து போய், முயற்சியைக் கைவிட்டு, எண்ணம், குறிக்கோள், திசையை மாற்ற, முடிவில் அவர்களின் வாழ்க்கையே திசைமாறி போய்விடுகிறது. நாம் முயற்சிக்கும் வழிமுறைகளில் மாற்றத்தை உண்டாக்கினால் வெற்றி பெறலாம் என்பது மாற்ற முடியாத உண்மை!
நம் முயற்சியை யுக்கி, புத்தி, விடாமுயற்சிகளோடு செய்து வந்தால் கண்ணிற்கு தெரியாத விதியை நசிப்பித்து, காரியங்களில் நமக்கு வேண்டியவற்றைத் தேடிக்கொள்ள முடியும். நம்முடையத் தீவர முயற்சிக்குள்ளேயே விதி மற்றும் சோம்பலை ஒழித்துக்கட்டும் ‘மனதின் மர்ம சக்தி’ அடங்கி உள்ளது.
உடல் கோயில் என்றால் மனமே தெய்வம். மனது வைத்தால் இவ்வுலகில் சாதிக்க முடியாது என எதுவும் இல்லை!
-என். செல்வராஜ், கோவை.

No comments:

Post a Comment