கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாத ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது.
பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.
எனவே, அவ்வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும்ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.
இனிவரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment