நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை வரும் 26-ஆம் தேதி நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான குறிப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டால், குளிர்காலக் கூட்டத்தொடருக்கான அறிவிப்பை புதன்கிழமை மத்திய அரசு வெளியிடும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாத நிலையில் 53 மசோதாக்கள், மக்களவையில் முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற உத்தேசித்திருந்த 13 மசோதாக்களில் ஐந்து மசோதாக்கள் ஆகியவை நிறைவேறாமல் பல்வேறு துறைகளின் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் பரிசீலனையில் உள்ளன. இதேபோல, மத்திய அரசு உத்தேசித்த சரக்கு, சேவை வரிகள் மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
முந்தைய கூட்டத்தொடரில் ஐபிஎல் முன்னாள் ஆணையரும் லண்டனில் வசித்து வரும் இந்திய தொழிலபதிபருமான லலித் மோடிக்கு சாதகமாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழல் முறைகேடு விவகாரத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செüஹான் உள்ளிட்டோருக்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்களை சுமத்தி எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவற்றுக்குப் போட்டியாக ஆளும் பாஜகவினரும் எதிர்க்குரல் எழுப்பியதால் பல நாள்கள் அவையில் முக்கிய அலுவல்கள் நடைபெறாமல் முடங்கின. இத்தகைய சூழலில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை இம்மாத கடைசி வாரத்தில் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வழக்கமாக நவம்பர் இரண்டாவது வாரத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், இம்முறை சிறிது காலம் தாழ்த்தி கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment