தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு: தெற்கு அந்தமான் கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 26, 2015

தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு: தெற்கு அந்தமான் கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி

தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில், புதிதாக மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கையில் செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது.
தற்போது, தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில், புதிதாக மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் (நவ.27) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை இருக்கும். மேலும் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (நவ 27-29) மூன்று நாள்களுக்கு பலத்த, மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்புண்டு. சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
மழை நிலவரம்(மி.மீட்டரில்):
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 100 மி.மீட்டர் மழை பதிவாகியது. அதை அடுத்து, மணிமுத்தாறு, அம்பாசமுத்திரத்தில் தலா 30 மி.மீ, திருச்செந்தூர், அறந்தாங்கியில் தலா 20 மி.மீ, ராமேசுவரம், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment