தமிழகத்தில் ஒரே நேரத்தில் 58 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்: தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிறது அ.தி.மு.க., அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 2, 2015

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 58 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்: தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிறது அ.தி.மு.க., அரசு

சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அ.தி.மு.க., அரசு துவக்கி உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, நேற்று ஒரே நாளில், 58 ஐ.பி.எஸ்., அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் மாற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 151 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த அரசின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம். வரும் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ள அ.தி.மு.க., அரசு, அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி உள்ளது.

தேர்தல் கமிஷன் விதிமுறை :

தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி இத்தகையோர், தேர்தல்
பணிகளில் ஈடுபட முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக பணிபுரியும் அதிகாரிகளை, தேர்தல் கமிஷனே இடமாற்றம் செய்துவிடும்; அது, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். அதனால், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், கடந்த மாதம் மாற்றப்பட்டார்; புதிய கமிஷனராக டி.கே.ராஜேந்திரனும், சட்டம் -- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக திரிபாதியும் நியமிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று ஒரே நாளில், 58 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, தமிழக அரசு இடமாற்றம் செய்தது. இவர்களில், 37 பேருக்கு, பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், சென்னை மாநகரபோக்குவரத்து கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும்; சென்னை கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி.,யாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

விரைவில் மேலும் பலர்:

கோவை டி.ஐ.ஜி., ஆயுஷ்மணி திவாரி, சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.,யாகவும்; போலீஸ் பயிற்சி கல்லுாரி டி.ஐ.ஜி., பெரியய்யா, சென்னை ஊர்க்காவல்படை ஐ.ஜி.,யாகவும்; சென்னை சிறைத்துறை டி.ஐ.ஜி., மவுரியா, சிறைத்துறை ஐ.ஜி.,யாகவும்; திருச்சி டி.ஐ.ஜி., செந்தாமரை கண்ணன், சென்னை ஐ.ஜி., ஆபரேஷனாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களை சேர்ப்பது உட்பட, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை பெறும் பணிகளை, தேர்தல் கமிஷன் முடித்துவிட்டதால், விரைவில், மாவட்ட கலெக்டர்கள் பலரும், அரசுத் துறை செயலர்கள் பலரும் மாற்றம் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment