வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைநீடிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 24, 2015

வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைநீடிப்பு

இன்று (24.11.15) காலை 11 மணியளவில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்: பட உதவி | இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்

சென்னையில் மட்டும் இதுவரை 114 செ.மீ. மழை

மாலத்தீவில் ஏற்கெனவே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைந்துவிட்ட நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை வாய்ப்பு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையால் சென்னையில் இதுவரை 114 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் செய்தியாளர்களை இன்று (செவ்வாய்கிழமை) சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், "வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் இதுவரை 48 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்யும் மூன்று மாதங்களில் கிடைக்க வேண்டிய சராசரியான 44 செ.மீ. மழையளவைத் தாண்டி இம்முறை மழை பெய்துள்ளது.சென்னையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்தமுறை வழக்கத்தை விடவும் மிக அதிகமாக இதுவரை 114 செ.மீ மழை பதிவாகியுள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். ஏற்கெனவே மாலத்தீவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைந்துவிட்டது.தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.அதிகபட்சமாக பாபநாசத்தில் 18 செ.மீ மழையும், சென்னை தாம்பரத்தில் 17 செ.மீ. மழையும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 செ.மீ. மழையும் பெய்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment