நில வழிகாட்டி மதிப்பு இறுதியானதல்ல: பதிவுத்துறை விளக்கத்தால் குழப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 5, 2024

நில வழிகாட்டி மதிப்பு இறுதியானதல்ல: பதிவுத்துறை விளக்கத்தால் குழப்பம்

நில வழிகாட்டி மதிப்பு இறுதியானதல்ல: பதிவுத்துறை விளக்கத்தால் குழப்பம் 

 நிலங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் இறுதியானதல்ல; கட்டடம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மதிப்பீடு அடிப்படையில் மாறுபடும் என, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
         தமிழகத்தில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவுத்துறை வெளியிட்டு வருகிறது. இந்த மதிப்புகள் அடிப்படையில் இருக்கும் பத்திரங்கள் மட்டுமே பதிவுக்கு ஏற்கப்படும். கடந்த ஆண்டு அரசு வெளியிட்ட சில அறிவிப்புகளால், வழிகாட்டி மதிப்புகளை கடைப்பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பதிவுத்துறை ஆளானது. 

             சட்ட ரீதியான நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சில முடிவுகளை பதிவுத்துறை எடுத்தது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், தற்போது பயன்பாட்டில் உள்ள வழிகாட்டு மதிப்புகளை, 10 சதவீதம் வரை உயர்த்தி, ஜூலை, 1ல் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய மதிப்புகள் குறித்த விபரங்கள்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 'நிலங்களுக்கான இந்த மதிப்புகள் இறுதியானதல்ல; 

        கட்டடம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மதிப்பீடு அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது' என்ற, குறிப்பு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்து. 

         இதுகுறித்து, சார்பதிவாளர்கள் கூறியதாவது: அரசு துறைகளால், பொதுவாக வழிகாட்டி மதிப்புகள் தான் ஆதாரமாக பார்க்கப்படுகின்றன. தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகளும் சேர்த்து அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த மதிப்புகள், கட்டடங்கள் மற்றும் துறை மதிப்பீடுகள் அடிப்படையில் மாறும் என பதிவுத்துறை குறிப்பிடுவது, மக்களை குழப்புவதாக அமைந்துள்ளது. 

         ஏற்கனவே, வழிகாட்டி மதிப்புகளில் ஏகப்பட்ட பிரச்னைகள், புகார்கள் வருகின்றன. இது போன்ற குறிப்புகளால், துறை நிர்வாகமே பல்வேறு பிரச்னைகளை இழுத்து விடுவது ஏன் என்று தெரியவில்லை. கட்டடங்களுக்கான மதிப்பு கணக்கிடும் வசதி, இதே இணையதளத்தில் தனியாக உள்ளதால், மக்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment