மத்திய அரசு தரும் நிதியை எமிஸ் பணிக்கு செலவிடுவதா? ஆசிரியர் சங்கம் புகார்
சென்னை:கணினி அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டிய நிதியை, 'எமிஸ்' பணியாளர்களுக்கு வழங்குவதாக, பள்ளி கல்வித்துறை மீது ஆசிரியர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பொதுச்செயலர் குமரேசன் கூறியதாவது:
தமிழகத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்புடன், ஆசிரியர் பயிற்சியான பி.எட்., முடித்த 60,000 பேர் உள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை கற்பிக்க வேண்டும் என்பதற்காக, சமக்ர சிக்ஸா ஐ.சி.டி., என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக, நாடு முழுதும் உள்ள மாநில அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்குகிறது.
ஆனால், தமிழக அரசு இதுவரை, தனியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையோ, பாடவேளையையோ ஒதுக்காமல், அறிவியல் பாடத்துடன் இணைத்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, இல்லம் தேடி கல்வி, எமிஸ் பணியாளர்களுக்கு ஒதுக்குகிறது.
இதனால், அரசு பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவை பெற முடியவில்லை. மேலும், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் 60,000 கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment