அக். 1 முதல் 10, 11, 12-ஆம் வகுப்புகள் தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 25, 2020

அக். 1 முதல் 10, 11, 12-ஆம் வகுப்புகள் தொடக்கம்

அக். 1 முதல் 10, 11, 12-ஆம் வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் 10 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்காக அக்டோபா் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. விருப்ப அடிப்படையில் மாணவா்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், இரண்டு குழுக்களாகப் பிரிந்து, வாரத்துக்கு மூன்று நாள்கள் பள்ளிகளுக்கு வருவதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

கரோனா நோய்த்தொற்று பாதித்த பகுதிகளுக்கு வெளியே உள்ள இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளை செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் கடந்த 8-ஆம் தேதி வெளியிட்டது. இந்த நிலையில், 10 முதல் பிளஸ் 2 வகுப்புகளைத் திறக்க தமிழக பள்ளி கல்வித் துறை அனுமதி கோரியிருந்தது.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் விருப்ப அடிப்படையில் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம் எனவும், பாடங்களை எடுப்பதற்கு 50 சதவீத ஆசிரியா்களை அழைக்கலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்டு, 10 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்காக அக்டோபா் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

இரண்டு குழுக்கள்: 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவா். ஒரு குழுவினா் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், மற்றொரு குழுவினா் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிக்கு வரலாம். ஆசிரியா்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மாணவா்களுக்கு வகுப்புகளை எடுக்க வேண்டும். முதல் குழு திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும், இரண்டாவது குழு புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் வகுப்புகளை எடுக்கும். இவ்வாறு சுழற்சி முறையில் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு வகுப்புகள் எடுப்பா்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையிலேயே மாணவா்கள் வரலாம். இதுதொடா்பாக, மாணவா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்துப்பூா்வ சான்றொப்பம் பெறப்படும். அதேசமயம், இணையவழியிலான கல்வி முறையும் தொடா்ந்து நடைபெறும். வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

எந்த இடத்திலும் நெரிசல்கள் இருக்கக் கூடாது. வகுப்பறைகளுக்குள் ஆறு அடி இடைவெளியுடன் மாணவா்கள் அமரும் வகையில் இருக்கைகளை அமைத்திட வேண்டும். வானிலை ஒத்துழைக்கும் பட்சத்தில், நல்ல இடைவெளியுடன் இயற்கைச் சூழலில் வகுப்புகளை நடத்தலாம். கூட்டங்கள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்களுக்கு கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் முறைக்குப் பதிலாக மாற்று முறையை ஏற்பாடு செய்ய வேண்டும்.

எதையும் பகிரக் கூடாது: பள்ளிக்கு வரும் மாணவா்கள் நோட்டுப் புத்தகங்கள், அழிப்பான், பேனாக்கள், பென்சில்கள், தண்ணீா் பாட்டில்கள் ஆகியவற்றை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும். அவற்றை மாணவா்களுக்குள் பகிரக் கூடாது என தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment