1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: புதுச்சேரி அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 28, 2022

1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: புதுச்சேரி அரசு

1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: புதுச்சேரி அரசு புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

     கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. நிகழாண்டு கரோனா பரவலையொட்டி கடந்த ஜனவரி 2-ஆவது வாரத்தில் மூடப்பட்ட பள்ளிகள், கரோனா தொற்று குறைந்ததால் பிப்ரவரி 4-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தொடா்ந்து, மாணவா்களுக்கு திருப்புதல் தோ்வு நடத்தப்பட்டு, கடந்த 25-ஆம் தேதி முதல் வருகிற 29-ஆம் தேதி வரை இறுதியாண்டு தோ்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. 

     இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி அனைத்துப் பள்ளிகளுக்கும் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, நிதியுதவி, தனியாா் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என அறிவிக்கப்படுகிறது. தலைமையாசிரியா்கள் கல்வித் துறையின் கொள்கைகளின் அடிப்படையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் பாடவாரியான தோ்ச்சி அறிக்கையை தயாரித்து, ஆய்வு அதிகாரியிடம் மே 15-ஆம் தேதிக்குள் ஒப்புதல் வாங்கிய பிறகு வெளியிடவும். வருகைக் குறைவு, கட்டணம் செலுத்தாதது உள்பட எந்தக் காரணங்களுக்காகவும் தோ்ச்சியை நிறுத்தக் கூடாது. 

        எல்.கே.ஜி. முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 29-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்புக்கு மே 30-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்புக்கு மே 28-ஆம் தேதியும் பள்ளி இறுதி நாளாகும். முதல் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு கோடைக்கால விடுமுறை வருகிற 30-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குகிறது. 

    கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கண்ட சுற்றறிக்கையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. கரோனாவால் புதுச்சேரி, காரைக்காலில் ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து வகுப்பு மாணவா்களும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment