நாகை மாவட்டம் வேதாரண்யம் பன்னாள் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மோகனசுந்தரம்(51). இவர், 1992-ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து, 8 பள்ளிகளில் பணியாற்றி உள்ளார்.
கணித பாடத்தை எளிமையாக கற்றுத் தந்து, சிறப்பாக பணியாற்றியதற்காக மோகனசுந்தரத்துக்கு 2022-ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதை செப்.5-ம் தேதி தமிழக அரசு வழங்கி கவுரவித்தது.
நல்லாசிரியர் சான்றிதழுடன் அரசு வழங்கிய ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை மோகனசுந்தரம் தான் பணியாற்றி வரும் பள்ளி நிதிக்காக வழங்கியுள்ளார்.
இதேபோல, மோகனசுந்தரத்தின் மாணவரான கோகூர் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்(35) என்பவருக்கும் தமிழக அரசின் 2022-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர், மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் கல்வி கற்பித்து வருவதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரே கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் மோகனசுந்தரத்துக்கும், அவரது மாணவரான ஆசிரியர் சதீஷுக்கும் சென்னையில் செப்.5-ம் தேதி நடைபெற்ற விழாவில், ஒரே மேடையில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
2004-ம் ஆண்டு பன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் மோகனசுந்தரத்திடம் 10-ம் வகுப்பு படித்த சதீஷ், பின்னர் ஆயக்காரன்புலம் நடேசனார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தார். அப்போது, ஆசிரியர் மோகனசுந்தரமும் அங்கு பணி மாற்றலாகிச் சென்றதால், தொடர்ந்து 3 ஆண்டுகள் அவரிடம் கல்வி பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மாணவருடன் சேர்ந்து நல்லாசிரியர் விருது பெற்றது குறித்து தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் கூறியது:
என்னுடன் சேர்ந்து எனது மாணவரும் நல்லாசிரியர் விருது பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
என் மாணவர், எனக்கு நிகராக வளர்ந்திருப்பது, எந்தவொரு ஆசிரியருக்கும் கிடைக்காத பெருமை. சதீஷ் மேலும் பல விருதுகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஆசிரியர் சதீஷ் கூறியபோது, “என் ஆசானுடன் சேர்ந்து எனக்கு விருது அறிவித்ததை முதலில் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்ததைவிட, என் ஆசானுடன் சேர்ந்து கிடைத்திருப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது” என்றார்.
No comments:
Post a Comment