பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நவ.11-ல் தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 2, 2024

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நவ.11-ல் தொடக்கம்

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நவ.11-ல் தொடக்கம் 

         அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை நவம்பர் 11 முதல் 20-ம் தேதிக்குள் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கை விவரம்: 
    
        “தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. வட்டார அளவிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் நவம்பர் 8-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை கொண்டு நவம்பர் 11 முதல் 20-ம் தேதி வரை மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும். 

        இதில், முதல் 3 வெற்றியாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் நவ.21-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் வெற்றியாளர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு தனியாக நடத்திட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உடன் செல்ல வேண்டும்.

        பள்ளி தலைமையாசிரியர்கள் நடுவர்களாக இருந்தால், அந்த பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் போட்டியில் அவர்கள் நடுவர்களாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும். வட்டார அளவிலான போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாவட்ட அளவிலான போட்டிக்கு ரூ.1 லட்சமும் நிதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்திட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment