தேசிய நல்லாசிரியர் விருது' பெறும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன்‌.... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 28, 2022

தேசிய நல்லாசிரியர் விருது' பெறும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன்‌....

இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியத்தில், கீழாம்பல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கே.ராமச்சந்திரன்.

இந்நிலையில் அப்பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் மாற்றி காட்டியுள்ளார். இணைய வழியில் மாணவர்கள் பாடம் கற்க தனது சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஸ்மார்ட் கிளாஸ், இணைய சேவைகளை கையாள்வதற்கான பயிற்சி, சிலம்பம், இசைப்பயிற்சி, ஓவிய பயிற்சி என மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையிலான அனைத்து பயற்சிகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

தன்னுடைய சம்பளத்தில் மாணவர்களுக்காகவும், பள்ளியின் உள்கட்டமைப்புக்காகவும் செலவழித்து வருகிறார். அதன்படி பள்ளிக்கு சிசிடிவி கேமரா, RO வாட்டர், 'ஹை ஸ்பீடு' பிராட்பேண்ட் இன்டர்நெட், எல்இடி ப்ரொஜெக்டர், இன்வர்டர், கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் என பள்ளிக்குத் தேவையான எண்ணற்ற பொருட்களை தனது சம்பளத்தின் முக்கால் பங்குகளை செலவு செய்து தரம் உயர்த்தியுள்ளார்.

மேலும் இணைய சேவை, இனிய சேவை, இலவச சேவை என்று தொடங்கி பள்ளி வகுப்பு நேரங்கள் போக, மீதி நேரங்களில் அப்பகுதி பொதுமக்களுக்கு மாணவர்கள் மூலம் இணைய சேவை வழியாக ஆதார் கார்டு திருத்தம், மின்சாரக் கட்டணம் மற்றும் இதர அரசு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை இலவசமாக செய்து வருகிறார்.

அப்பகுதி கிராமத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு 'டிஎன்பிஎஸ்சி' போட்டித் தேர்வுக்குப் பயிற்சி வழங்கி அவர்களை அரசு ஊழியர்களாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆசிரியர் ராமச்சந்திரனின் ஒருங்கிணைந்த கல்வி திறன் மேம்பாட்டிற்க்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி இப்பள்ளிக்கு இங்கிலாந்து நிறுவனம் ஐ.எஸ்.ஓ தரச் சான்று கொடுத்து கௌரவித்துள்ளது. அதேபோல் பல்வேறு அமைப்புகள் இவரது சேவையை பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். 2018ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தேசிய விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு செப்டம்பர் 5ம் தேதி 'டெல்லி விக்யான் பவனில்' 'தேசிய நல்லாசிரியர் விருதை' குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்

தேசிய விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வாழ்த்து பெற வந்த ஆசிரியர் ராமச்சந்திரனிடம் பேசினோம்.

"இந்த தேசிய விருதை ஒட்டுமொத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றம் ஒன்றே என்னுடைய வாழ்நாள் இலக்கு. அரசு பள்ளி மாணவர்களுக்காக, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதனை முறையாக கொண்டு சேர்க்கும் பணியை சரியாக செய்துள்ளதாக நம்புகிறேன். அரசுப் பள்ளியில் பயிலும் மிகத் திறமையான மாணவர்கள், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவர்கள் திறமை வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விடுகிறது. எனவே மாணவர்களின் ஒவ்வொருவரின் திறமைகளையும் கண்டறிந்து, அதனை வெளிக்கொணரும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதனை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். என்னுடைய சிந்தனை முழுவதும் அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே, அதற்காகத்தான் மாணவர்களோடு மாணவர்களாக இருக்க வேண்டும் என நானும் அவர்களைப் போன்று பள்ளி சீருடை அணிந்து பணியாற்றி வருகிறேன். இப்போது மட்டுமல்ல "நான் பணி ஓய்வு பெறும் வரை பள்ளி சீருடையிலேதான் பணியாற்றுவேன்" இந்த 'தேசிய விருதையும் பள்ளி சீருடையிலேயே சென்று தான் வாங்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

தமிழகத்தில் தேசிய விருது பெரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலா இரண்டு ஆசிரியர்கள் தேசிய விருது பெற்ற நிலையில் நடப்பாண்டு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே தேர்வாகியுள்ளது, தமிழக பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது







No comments:

Post a Comment