10-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எழுத்துப் பிழை: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 15, 2024

10-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எழுத்துப் பிழை: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு!

10-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எழுத்துப் பிழை: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு! 

        பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் எழுத்துப் பிழையான வினாவுக்கு விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

                       தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. மார்ச் 28-ல் ஆங்கிலம், ஏப்.1-ல் கணிதம், ஏப்.4-ல் அறிவியல், ஏப்.8-ல் தேதி சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடந்தது. இதில் மார்ச் 26-ல் நடந்த தமிழ் மொழிப் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். 

        ஆனால் வினாத்தாளில் பகுதி 111-ல் பிரிவு 2-ல் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் என்ற பகுதியில் 33வது வினாவில், “நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக” என்று வினா உள்ளது. இதில் ‘எண்ணியிருந்த’ என்பதற்குப் பதிலாக தவறுதலாக ‘பண்ணியிருந்த’ அதாவது ‘ எ’ என்ற எழுத்துப்பதிலாக தவறுதலாக ‘ப’ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. 

            இதனால் மாணவர்கள் அந்த வினாவுக்கு விடையளிக்கலாமா, வேண்டாமா என்று சற்று தடுமாற்றம் அடைந்தனர். இதற்கு வினாவுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர். 

         இதுகுறித்து இந்து தமிழ் திசையில் மார்ச் 27ல் செய்தி வெளியானது. தற்போது தேர்வுத்தாள்கள் திருத்தும் பணியும் நடந்து வருகிறது. அதில் அரசுத்தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளில் எழுத்துப்பிழையான அந்த 33வது வினாவுக்கு விடை எழுத முயற்சி செய்திருப்பின் முழு மதிப்பெண் (3 மதிப்பெண்) வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
   இதுகுறித்து தமிழகத் தமிழாசிரியர் கழகம் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் நீ.இளங்கோ கூறுகையில், “மார்ச் 26ல் நடந்த பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தேர்வில் வினாத்தாளில் 33-ல் வினாவில் எழுத்துப்பிழை இருந்தது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 

             இந்த வினாவை எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கியதற்கு தமிழக அரசின் தேர்வுகள் இயக்ககத்திற்கு மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோல் வரும் காலங்களில் வினாத்தாளில் எழுத்துப்பிழை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்

No comments:

Post a Comment