உலக அளவில் செயற்கைகோள் தயாரிப்பில் இந்தியா 5-வது இடம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 20, 2018

உலக அளவில் செயற்கைகோள் தயாரிப்பில் இந்தியா 5-வது இடம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

உலக அளவில் செயற்கைக்கோள் தயாரிப்பில் இந்தியா 5-வது இடத்தில் இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-

சிறு வயதில் எனது தந்தையுடன் இலக்கிய நிகழ்வுகளுக்கு போவேன். அங்கு தமிழ் பாடல்கள் பாடுவார்கள். அப்போது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. முத்தமிழான இயல், இசை, நாடகம் என்பது சரியா எனக்கேட்டேன். நான்காவது ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என நினைத்தேன். அது அறிவியல் தமிழாக இருந்தது.

4 ஆண்டுகளுக்கு ஒரு செயற்கைக்கோள் என்றிருந்த நிலையில் மாதம் ஒரு செயற்கைக்கோளை உருவாக்குவோம் என திட்டமிட்டு, கடந்த 40 மாதங்களில் 36 செயற்கைக்கோள்களை உருவாக்கினோம். தமிழால் முடியும், தமிழ் படித்தால் முடியும் என்பதை செய்து காட்டினோம். உலக அளவில் செயற்கைக்கோள் தயாரிப்பில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. முதல், இரண்டாவது இடங்களுக்கு வரத்தயாராக இருக்கிறோம்.

அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பின. இதுவரை 51 முறை செயற்கைக்கோள் அனுப்பிய நிலையில், 30 முறைதான் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 40 சதவீதம்தான் வெற்றி பெற்றனர். அமெரிக்கா 5-வது முயற்சியிலும், ரஷியா 9-வது முயற்சியிலும் வென்றார்கள். ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இன்னும் வெற்றி பெறவில்லை.

இந்திய அரசு செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்ப திட்டமிட்ட போது, குறைந்த அளவு பணம், குறைந்த கால அளவு வழங்கியது.

17 மாதங்களில் இந்தியாவில் உருவான மங்கள்யான் செயற்கைக் கோளை முதன்முறையாக அனுப்பினோம். சரியான நேரம், இடம், வேகம், திசை எனக் கணக்கிட்டு, செவ்வாய்க்கு செயற்கைக் கோளை முதன்முறையாக அனுப்பி வெற்றி பெற்றோம். தற்போது செவ்வாயில் மழை பெய்கிறதா என்ற ஆராய்ச்சி நடைபெறுகிறது.

இந்தியா முன்னேறுவதை உலக நாடுகள் கவனிக்கின்றன. நம்மால் காற்று இல்லாமல் எவ்வாறு 10 நிமிடம் இருக்க முடியாதோ, அதேபோல் செயற்கைகோள்கள் இல்லாமல் இந்தியா செயல்பட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment