தமிழகத்தில் இழுபறி நீடித்துவந்த நிலையில் டிசம்பர் இறுதியில்
உள்ளாட்சி தேர்தல்? : தயார் நிலையில் இருக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறம் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் வாக்கு பதிவுக்கு 5 வண்ண வாக்குசீட்டு பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. மேலும், அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சியை உடனே தொடங்க வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட படிவங்களை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில், 2வது முறையாக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் 6 வரை நீடித்தது. இதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை, வாக்காளர் பட்டியல், வாக்குசாவடி இறுதி செய்தல், தேர்தல் பொருட்களை தயார் நிலையில் வைத்திருத்தல், தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது : உள்ளாட்சி தேர்தல் முன்ேனற்பாடு பணிகள் தொடர்பான அனைத்து கலெக்டர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெறும் நகர்புறங்களுக்கு தேவையான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டு முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பிரதிநிதிகள் முன்நிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது வாக்குச்சாவடிகளில் மின் விளக்கு வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்டவைகள் உள்ளதாக என்பது உறுதி செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைகிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைந்துள்ளதால் அரையாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பு அல்லது தேர்வு முடிந்த பின்புதான் வாக்குப்பதிவு நடத்த முடியும். இது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். இதற்கு அடுத்த நாள் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற ஒரு நாள் அவகாசம் வழங்க வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தேதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கும் குறைந்தபட்சம் 7 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் முடிவடைய குறைந்தது 30 நாட்களாவது தேவைப்படும். எனவே இந்த மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு அரையாண்டு தேர்வு முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் டிசம்பர் 31வரை உள்ளது. எனவே அதற்குள் தேர்தல் நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆசியர்கள் பட்டியல்
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற விருப்பம் உள்ள ஆசியர்கள் தங்களின் விண்ணப்பங்களை நாளைக்குள் அளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே உதவி தேர்தல் அலுவலர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment