சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி 12ம் தேதி தொடங்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியாகும். தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 6,900 பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. ஏறக்குறைய ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் இடையே 5 நாட்கள் விடுமுறையில் தேர்வுகள் நடந்தன. பிளஸ் 2 தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவியரும், தனித் தேர்வர்களாக 44 ஆயிரத்து 686 பேருமாக மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதி வருகின்றனர்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2ம் தேதியுடன் முடிந்தன. இந்நிலையில், 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. இந்த தேர்வுகளுடன் இன்றோடு பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன. இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி வரும் 12ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் 44 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மே 16ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.
No comments:
Post a Comment