பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைக்கிறது? - விலை உயர்வை தடுக்க நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 5, 2018

பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைக்கிறது? - விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை இந்த விலை நிர்ணயத்தை செய்கின்றன. முதலில் மாதத்துக்கு ஒரு தடவையும், பிறகு மாதம் இருமுறையும் விலை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டிசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

கடந்த 10 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை மிக அதிக அளவுக்கு உயர்ந்துவிட்டது. 10 மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.56 ஆக இருந்தது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77 ஆக உயர்ந்துவிட்டது.

அதாவது கடந்த 10 மாதங்களில் பெட்ரோல் விலை சுமார் 20 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலையும் இதே மாதிரி உயர்ந்துள்ளது.

முன்பெல்லாம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினமும் விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. மாறாக மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து சுங்க வரியை விதித்து வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள், பெட்ரோலியம் பொருட்கள் மீது விதித்துள்ள வரி விதிப்பு அதிக அளவில் உள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் விலையில் பாதிக்கு பாதி மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மட்டும் 9 தடவை பெட்ரோலியம் பொருட்கள் மீது மத்திய அரசு வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.

சுங்க வரியை குறைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது 2 சதவீதம் சுங்க வரியை குறைத்தபோது, மத்திய அரசுக்கு ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு வரி விதிப்பை குறைக்க தயங்குகிறது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருவது நாடு முழுவதிலும் வாகன ஓட்டிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இனியும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மத்திய அரசு மீது பொதுமக்களுக்கு வெறுப்பு வந்து விடும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை உணர்ந்துள்ள பிரதமர் மோடி அரசு, பெட்ரோல் டீசல் விலையை இனி உயர விடக்கூடாது என்று முடிவு செய்துள்ளது.

இதற்காக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் சுங்க வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் இதை உறுதி செய்தார்.

ஆனால் வரி குறைப்பு எத்தனை சதவீதம் இருக்கும் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எத்தனை சதவீதம் குறைத்தாலும் நிச்சயம் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இந்த வருவாய் இழப்பை பெட்ரோலியம் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பெட்ரோலியம் நிறுவனங்கள் தயக்கம் தெரிவித்துள்ளன. என்றாலும் வரி குறைப்பை விரைவில் அமல்படுத்த மத்திய நிதி மற்றும் பெட்ரோலிய அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment