பார்வையற்ற மாணவிகளின் கலங்கரை விளக்கம்: அரசு கல்லூரியின் சத்தமில்லாத சாதனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 5, 2018

பார்வையற்ற மாணவிகளின் கலங்கரை விளக்கம்: அரசு கல்லூரியின் சத்தமில்லாத சாதனை

திருநெல்வேலி பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் நல மையம் பார்வையற்ற மாணவிகளுக்கு கலங்கரைவிளக்கமாக திகழ்கிறது. திருநெல்வேலி மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையற்ற மாணவிகள் இங்கு பயிற்சிக்கு வருகின்றனர்.

இளங்கலை முதல் முனைவர் பட்டப்படிப்புகள் வரை வழங்கும் இந்த அரசுக் கல்லூரியில் படிக் கும் மாணவிகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டும். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று பெயர்பெற்ற பாளையங்கோட்டையில் செயல்படும் இக்கல்லூரி, ஓசையின்றி ஒரு சேவை செய்து வருகிறது. இதுவரை வெளியுலகு அறியப்படாத சேவை அது.

கல்லூரியில் 52 மாற்றுத்திறனாளிகள் பயில்கின்றனர். அவர்களில் 19 பேர் பார்வையற்ற மாணவிகள். இவர்களுக்கு வழிகாட்டவும், உயர்கல்வி வாய்ப்புக்கு உதவவும் ஏற்படுத்தப்பட்டதுதான் மாற்றுத் திறனாளிகள் நல மையம்.

கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இம்மையத்துக்கு கடந்த ஆண்டில்தான் 2 கணினிகள் தனியார் உதவியுடன் கிடைத்திருக்கிறது. பார்வையற்ற மாணவிகள் இணையம் வழி கல்வி கற்க இது உதவுகிறது. இதுதவிர வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை பதிவு செய்து கற்கும் வகையில் பார்வையற்ற மாணவிகளுக்கு ஐ பேடுகள், குரல் பதிவு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்களையும் தன்னார்வ நிறுவனங்களும் சில தனி நபர்களாலும் வாங்கி கொடுக்கப் பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நவீன இணையவழி கற்றல் குறித்த கருத்தரங்குகளையும் தனியார் வழங்கும் கல்வி உதவித்தொகைகளை பெற்றுத்தரும் பெரும்பணியையும் இம்மையம் செய்து வருகிறது. இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி ஊக்குவிப்பது, அவர்களுக்கான அரசு கல்வி உதவித்தொகைகளை பெற்றுத்தருவது, மாற்றுத் திறனாளிகளின் ஆளுமை மேம்பாட்டுக்கு வழிகாட்டுவது என்றெல்லாம் பல் வேறு சேவைகளை இம்மையம் செய்து வருகிறது.

இக் கல்லூரி பேராசிரியர்கள் பலரும் நிதியுதவி உள்ளிட்ட உதவிகளையும் செய்கிறார்கள். விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாணவிகளுக்கும் கல்வி அளிக்கிறது இந்த மையம். தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் செயல்படும் இம்மையத்துக்கு இதுவரை அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்பது தான் வேதனை. இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நா.வேலம்மாள் கூறும்போது, “பார்வையற்ற மாணவிகளுக்காக இம்மையத்திலுள்ள கணினிகளில் 3.50 லட்சம் புத்தகங்களை பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறோம்.

பிரெய்லி முறையில் கற்க உதவுகிறோம். மாற்றுத்திறன் மாணவிகளுக்கான இவ்வாண்டுக்கான கல்வி உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை. அவர்களுக்கான உதவிகளை உடனுக்குடன் கிடைத்தால்தான் உயர்கல்வி கற்க முடியும். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் தகுதியிருப்போருக்கு வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீட்டை வழங்கினால்தான் அவர்களுக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்” என்று தெரிவித்தார்.

பார்வையற்ற மாணவிகளின் நலனுக்காக செயல்படும் இந்த அமைப்பு அர்ப்பணிப்புமிக்க பேராசிரியர்களால் இயங்குகிறது. கண்ணுக்கு கண்ணாக, பார்வையற்றோரின் கலங்கரைவிளக்கமாக நின்று வழிகாட்டுகிறது.

.நன்றி : தி இந்து

No comments:

Post a Comment