அரசு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்களையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’’ - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 11, 2018

அரசு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்களையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’’

பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சிறு குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடம், அசைன்மெண்ட் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகள் மீது திணிக்கின்றன. குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் எடையை புத்தக சுமையாக சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், சிபிஎஸ்இ பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது எனவும், மற்ற வகுப்புகளுக்கு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என அனைத்து மாநில சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் 2 முறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென சிபிஎஸ்இ பள்ளிகள் தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், “இந்த உத்தரவை செயல்படுத்த ஏற்கெனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வரும் 17-ம் தேதிக்குள் இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்களையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’’ என எச்சரித்து விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்

No comments:

Post a Comment