பள்ளி பராமரிப்பு மானியமில்லாமல் அரசுப்பள்ளிகள்
தவிப்பு :தலைமையாசிரியர் கழகம் குற்றச்சாட்டு
நிதியில்லாமல் அரசு பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த நிதியை பள்ளிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணி, மாநில துணைத்தலைவர் நாகசுப்பிரமணி, மாவட்ட துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், கள்ளர் பள்ளி தலைவர் சின்னபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி, அனைவரும் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு மானியம் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், நிதியில்லாமல் அரசு பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த நிதியை பள்ளிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டிற்கான இலவச லேப்டாப் வந்தவுடன் அதனை மாவட்ட நிர்வாகம் தன்பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவற்றை மாணவர்களுக்கு விரைவாக உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் மற்றும் ஏடிபிசி ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்தில் உள்ள மூத்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்.
மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உதவி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு, மாணவர்களின் எண்ணிக்கை 750ல் இருந்து 500 என நிர்ணயம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கான படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment