ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் ஏற்படுத்தும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதி ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐநா அறிவித்தது.
1970ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓசோன் படலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிஎஃப்சி என்ற குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுக்களே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டது.
அண்டார்டிகா கண்டத்தின் மேலே அமெரிக்க கண்டத்தின் அளவுக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை இருக்கிறது. புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதற்கும் இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால்,அண்டார்டிகா வான் பகுதியில் ஏற்பட்ட துளை படிப்படியாகச் சுருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்துவிடும் என்றும், ஓசோன் அடுக்கின் தென் அரைக்கோளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை விரைவில் சரி செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment