ஆசிரியர்களுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 22, 2020

ஆசிரியர்களுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள்

ஆசிரியர்களுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள்
அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கையாக, `தன்னை நேரில் வந்து யாரும் சந்திக்க வேண்டாம்' என்று ஃப்ளெக்ஸ் போர்டு வைத்துள்ளார். ஆனால், அவரது தலைமையின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வித்துறையோ, ஆசிரியர்களைப் பணிக்கு வரச்சொல்லி அறிவித்துள்ளது.
`கொரோனா தொற்று பரவுவதால், என்னை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம்’ எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தன் வீட்டின் முன் ஃப்ளெக்ஸ் வைத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் பிரச்னைகளைக் கேட்டறிந்து குறைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவரே இதுபோல், மக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்வது முறைதானா என்று கொந்தளிக்கின்றனர் பொதுமக்கள்.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு, `பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்’ என விடுமுறை அறிவித்துவிட்டது பள்ளிக் கல்வித்துறை. ஆனாலும், ஆசிரியர்கள் பணி நிமித்தம் பள்ளிகளுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவுறுத்தல், ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத் தலைவர் தியாகராஜன் பேசும்போது, ``கொரோனா மாதிரியான பேரிடர் காலத்தில், அத்தியாவசியப் பணியில் இருக்கக்கூடியவர்கள் மட்டுமே பணிக்கு வந்தால் போதுமானது என அரசே சொல்லிவருகிறது.
கல்வித்துறையைப் பொறுத்தவரையில், ஆசிரியர் பணி என்பது 95 சதவிகிதம் மாணவர்கள் சார்ந்த பணியாகத்தான் இருக்கிறது. அந்த மாணவர்களே பள்ளிக்கு வராமல் விடுமுறையில் இருக்கும்போது, ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து என்ன செய்ய முடியும்?
அடுத்த ஆண்டுக்கான பாடத்திட்டம் வரையறுத்தல், டைம் டேபிள் தயார் செய்தல் மற்றும் க்யூ ஆர் சம்பந்தப்பட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடலாம் என்கிறார்கள். இந்த வேலைகளை வீட்டிலிருந்தே ஆசிரியர்களால் செய்து முடிக்க முடியும். தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து நெடுந்தொலைவு பயணித்து பள்ளிகளில் அமர்ந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை.
இதுமாதிரியான பேரிடர் காலங்களில், ஆசிரியர்களாகிய நாங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான், அவசர உதவிகளுக்கு ஆசிரியர்களாகிய எங்களையும் அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே, பள்ளிகளுக்கு வந்திருந்து பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவை பள்ளிக்கல்வித்துறை விலக்கிக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மணிமேகலை பேசும்போது, ``கிராமப்புறங்களில் இப்போதும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் நிறைய இருக்கின்றன. ஊரைவிட்டு வெளியே காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இதுமாதிரியான பள்ளிகளில் மாணவர் வருகை இல்லாமல், பெண் ஆசிரியர்கள் மட்டும் வந்துபோவதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.
குறிப்பாக, ஆசிரியைகளின் பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத சூழலே நிலவுகிறது. வீட்டில், தங்கள் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு பணி நிமித்தமாகப் பள்ளிக்கு வருகிற ஆசிரியைகளுக்கும் அச்சமாக உள்ளது. எப்போதும் இல்லாத இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். நடைமுறையில் எங்களுக்கு இருக்கின்ற தர்மசங்கடங்களைக் கருத்தில்கொண்டு அரசு இவ்விஷயத்தில் நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும்’’ என்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர் முத்துச்சாமியும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரங்கராஜன், ``எங்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டங்கள் நடத்தினோம். அதனாலேயே திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக இதுமாதிரியான அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிடுகிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து காக்க வேண்டும் என்ற எண்ணத்தில், `தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்’ என்று வீட்டின் முன் ஃப்ளெக்ஸ் வைத்துக்கொள்கிற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதே கொரோனா பாதிப்பு ஆசிரியர்களுக்கும் வந்துவிடக் கூடாது என்ற அக்கறையோடு செயல்பட வேண்டும்’’ என்றார் குமுறலாக.
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்புகொண்டோம். செல்பேசியில் பேசிய அமைச்சரின் உதவியாளர், ``முதல் அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரிலேயே அமைச்சர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. எனவே, எந்தவொரு அமைச்சரும் தனிப்பட்ட முறையில் ஊடகத்தினரிடம் கருத்து பரிமாற வேண்டாம் என முதல் அமைச்சர் உத்தரவிட்டிருப்பதால், இதுசம்பந்தமான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்துக்கொள்ளுங்கள்" என்றார்.
பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``பொதுமக்கள் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என அமைச்சர் ஃப்ளெக்ஸ் வைத்திருப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான். மற்றபடி, மக்கள் குறைகளைக் கடிதம் மற்றும் மின்னஞ்சல் போன்ற தகவல் தொடர்புகளின் வழியே அமைச்சர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தினமும் அதிகாரிகளோடு கலந்தாலோசனை செய்துவருகிறார். ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை முதல் அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்று பரிசீலனை செய்யும்படி கேட்டிருக்கிறோம். விரைவில் நல்லதொரு அறிவிப்பு வரும்!'' என்றனர் நம்பிக்கையோடு!
நல்லதை சீக்கிரமாகச் செய்தால்தான் நிஜமாகவே நல்லது!

No comments:

Post a Comment