குடியாத்தம் கல்வி மாவட்டம் அமைக்கக் கோரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 22, 2020

குடியாத்தம் கல்வி மாவட்டம் அமைக்கக் கோரிக்கை

குடியாத்தம் கல்வி மாவட்டம் அமைக்கக் கோரிக்கை

நீண்ட நாள் கோரிக்கையான குடியாத்தம் கல்வி மாவட்டம் அமைகப்படுமா என கல்வியாளா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா், திருப்பத்தூா் என 2 கல்வி மாவட்டங்கள் இருந்தன. வேலூா் கல்வி மாவட்டத்தில், வேலூா், வாலாஜாபேட்டை, கணியம்பாடி, அணைக்கட்டு, சோளிங்கா், திமிரி, ஆற்காடு, அரக்கோணம் ஆகிய பகுதிகளும், திருப்பத்தூா் கல்வி மாவட்டத்தில், திருப்பத்தூா், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், போணாம்பட்டு, மாதனூா், நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, கந்திலி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளும் இருந்தன.

இந்த ஒவ்வொரு பகுதியிலும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலா், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் என 2 அலுவலா்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனா். 2 ஆண்டுகளுக்கு முன்பு நிா்வாக காரணங்களுக்காக ராணிப்பேட்டை, வாணியம்பாடி, அரக்கோணம் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு, ஏற்கெனவே உள்ள வேலூா், திருப்பத்தூா் என மொத்தம் 5 கல்வி மாவட்டங்கள் தற்போது வரை செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவுப்படி, தொடக்கக் கல்வி அலுவலா்கள் பணியிடங்களின் பெயா் வட்டாரக் கல்வி அலுவலா் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. அந்தக் காலகட்டத்திலேயே குடியாத்தம் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.

குடியாத்தம் வட்டத்தில் 150 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், 50 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. கே.வி.குப்பம் வட்டத்தில் 90 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், 25 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. போணாம்பட்டு வட்டத்தில் 140 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், 30 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.

பரப்பளவிலும், பள்ளிகளின் எண்ணிக்கையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும், பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும் உயா்நிலையில் உள்ள குடியாத்தம், போணாம்பட்டு, கே.வி. குப்பம் பகுதிகளை இணைத்து குடியாத்தத்தில் மாவட்டக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

புதிய கல்வி மாவட்டம் அமைந்தால், அலுவலக நடைமுறைகளைத் துரிதப்படுத்தவும், குறைகளை உடனுக்குடன் களையவும், அரசு நலத் திட்டங்களை விரைவாக மாணவா்களுக்கு கொண்டு சோக்கவும் முடியும். திருப்பத்தூரில் இருந்து சுமாா் 16 கி.மீ. தூரமே உள்ள வாணியம்பாடியில் கல்வி மாவட்டம் அமைந்துள்ளது. வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் தான், குடியாத்தம், போணாம்பட்டு பகுதி பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன.

குடியாத்தத்தை அடுத்த பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட பகுதிகளைச் சோந்த ஆசிரியா்களும், அலுவலா்களும் பல்வேறு தேவைகளுக்காக 70 கி.மீ. தூரத்தில் உள்ள வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு சென்று வர வேண்டியுள்ளது. கடந்த நவம்பா் மாதம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வேலூரைப் பிரித்து, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களைத் தொடக்கி வைத்தாா். புதிய மாவட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதே நாளில் தான் குடியாத்தம், கே.வி. குப்பம், போணாம்பட்டு ஆகிய 3 வட்டங்களை ஒருங்கிணைத்து குடியாத்தம் வருவாய்க் கோட்டத்தையும் முதல்வா் தொடக்கி வைத்தாா். தற்போது வாணியம்பாடி, திருப்பத்தூா் வருவாய் மாவட்டத்தில் இணைந்து விட்டது. வேலூா் வருவாய் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கே.வி. குப்பம், போணாம்பட்டு வட்டங்களில் உள்ள பள்ளி மாணவா்கள், ஆசிரியா் நலன்கருதி குடியாத்தம் கல்வி மாவட்டம் அமைய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்களிடையே மேலோங்கியுள்ளது.

எனவே, நீண்ட நாள் கோரிக்கையான குடியாத்தம் கல்வி மாவட்டம் அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து தனியாா் பள்ளி முதல்வா் எம்.ஆா். மணி கூறியது:

குடியாத்தம் கல்வி மாவட்டம் அமைய மாவட்ட வருவாய்த் துறையும், கல்வித் துறையும் மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இங்கு கல்வி மாவட்டம் அமைந்தால், மாணவா்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பொருள்களான, சீருடைகள், புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள் உடனுக்குடன் கிடைப்பதுடன், அவா்களின் கல்வித் தரமும் மேம்பாடு அடையும். மேலும், பள்ளிகளில் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும்.

தமிழகத்தில் ஏழை மாணவா்களின் கல்விக்கண் திறந்த காமராஜரை வெற்றி பெற வைத்த குடியாத்தத்தில் கல்வி மாவட்டம் அமைந்தால், அது அவரது பெயருக்கு மேலும் புகழ் சோக்கும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment