10ம் வகுப்பு தேர்வு முன்னேற்பாடு செய்யஆசிரியர்கள் 20ம் தேதிபள்ளிக்கு வர வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு-தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரங்களையும் அனுப்ப வேண்டும்
பத்தாம் வகுப்பு தேர்வு பணிகளை மேற்கொள்ள அனைத்து ஆசிரியர்களும் 20ம் தேதி பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடக்க இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவர்கள் படித்துவரும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒரு அறைக்கு 10 மாணவர்கள் வீதம் தயார் செய்ய வேண்டும்
அங்கு போதுமான இருக்கைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அறிக்கையை உயர்நிலை, மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களின் இருப்பிட முகவரி, செல்போன் எண், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுத அவர்களாகவே வருகிறார்களா அல்லது போக்குவரத்து வசதி தேவைப்படுகிறதா என்று அந்தந்த மாணவர்களின் பெற்றோரிடம் கேட்டு அதற்கான விவரங்களையும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் தயாரித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரங்களையும் அனுப்ப வேண்டும். அனைத்து தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக வரும் மாணவர்கள் உட்கார வசதியாக கூடுதல் வகுப்பறைகள் ஒதுக்க வேண்டும்.
பள்ளி ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருக்கிறார்களா அல்லது வெளியூர் சென்றிருக்கிறார்களா என்பதை 18ம் தேதிக்குள் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் 20ம் தேதி பள்ளிக்கு வந்து தேர்வுப் பணிகளை செய்ய அறுவுறுத்த வேண்டும். தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் செல்போன் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment