புவிசார் குறியீடு என்பது என்ன? அதனால் என்ன பயன்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 13, 2020

புவிசார் குறியீடு என்பது என்ன? அதனால் என்ன பயன்?

ஒவ்வொரு ஊருக்கும் சில தனித்தன்மையான பொருட்கள் பிரபல்யமாக இருக்கும். உதாரணமாக திருநெல்வேலிக்கு அல்வா, சேலத்திற்கு மாம்பலம், காஞ்சிபுரத்திற்குப் பட்டு. இப்படி பாரம்பரிய முறைப்படி, வேறெங்கும் கிடைக்காத சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்து தான் இந்த புவிசார் குறியீடு. இதன்மூலம் பொருட்கள் உற்பத்தியாகும் இடத்தினை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
இந்த புவிசார் குறியீட்டின் மூலம் பொருட்களின் தரத்தினையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். மேலும் ஒரே மாதிரியான பெயரில் தயாரிக்கப்படும் போலி நிறுவனங்களின் பொருட்களைத் தடை செய்யவும் பொதுமக்கள் அதனால் பாதிப்படையாமல் காக்கவும் முடியும்.

சட்டம்
இந்திய அரசு கடந்த 1999 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்திய அரசு 1999-ஆம் ஆண்டு பல வகை பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. இதன் சாராம்சம் என்னவென்றால்,
* திருபுவனத்தில் தயாராகும் பிரத்யேக பட்டு சேலைகளை வேறு ஊரில் தயாரித்து திருபுவனம் பட்டு சேலைகள் என விற்க முடியாது.
* பத்தமடை பாய்களை வேறு ஊர்களில் தயாரித்து பத்தமடை பாய் என பொய்யாகக் கூற முடியாது.
* சோலாப்பூர் பெட்ஷீட்களை கரூரில்  தயாரித்து சோலாப்பூர் விலாசம் போட்டு சோலாப்பூர் பெட்ஷீட்டுகள் என விற்க முடியாது.
புவிசார் குறியீட்டைப் பதிவு செய்வதால் ஏற்படும் பயன்கள்:
* பொருட்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கும்.
* புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருள்களை மற்றவர்கள் தவறாக விற்பது தடுக்கப்படும்.
* ஏற்றுமதி அதிகரிக்கும்.
* சர்வதேச வர்த்தகத்தில் சட்ட பாதுகாப்பு கிடைக்கும்.
ஓரிடத்தில் தயாரிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் அதன் பெருமையை விளக்கும் விதமாக அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த பொருளை அந்த இடத்தில் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதோடு அதற்கான அங்கீகாரமும் உலக அளவில் சென்றடையும். இதுவரை தமிழகத்தில் தஞ்சை கலைத்தட்டுகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனிடையே தஞ்சையில் செய்யப்படும் நெட்டி மாலை மற்றும் வேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment