தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவையின் பல்வேறு புதிய அறிவிப்புகள்-ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 21, 2021

தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவையின் பல்வேறு புதிய அறிவிப்புகள்-ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்

 தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் பல்வேறு புதிய அறிவிப்புகள்-ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.


சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.

முன்னதாக பேரவைக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர்.


இதன் பிறகு தமிழில் பேசி தமது உரையை ஆளுநர் புரோஹித் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார்.


அப்போது அவர் பேசியதாவது, தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கை வாழுங்கள். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.


தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டுவரப்படும். அதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படும்.


சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்


தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்


கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 


கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். 


மாவட்டம் தோறும் பணிபுரியும் மகளிருக்காக விடுதிகள் அமைக்கப்படும்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை திட்டம் மீண்டும் உருவாக்கப்படும். தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.


மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும்.


தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவோம்.


மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை  மாநகராட்யின் எல்லை விரிவாக்கப்படும்.


தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து ஜூலை  மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஆளுநரை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர். ஆளுநா் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தது வருகிறார். அதன் பிறகு, அதனை தமிழில் பேரவைத் தலைவா் அப்பாவு வாசிப்பாா்.


கூட்டத் தொடா்: ஆளுநா் உரை நிறைவடைந்ததும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்கள் இறுதி செய்யப்படும். செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) வரை கூட்டத் தொடா் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.


இந்த கூட்டத் தொடரில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது பேரவை உறுப்பினா்கள் உரையாற்றுவா். பேரவையில் உள்ள கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்று, அவையில் உறுப்பினா்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.


16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் என்பதால், கேள்வி நேரம் நடைபெற வாய்ப்பில்லை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். உறுப்பினா்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதனை துறைகளுக்கு அனுப்பி பதில்களைப் பெற காலம் தேவைப்படுவதால், கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என அவா் கூறியிருந்தாா். எனவே, தினமும் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியதுமே ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களே நடைபெறும்.


முக்கிய பிரச்னைகளில் தீா்மானம்: 


தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடா்பாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சி, நீட் தோ்வு, ஏழு போ் விடுதலை, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசால் தீா்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்தத் தீா்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளன.

No comments:

Post a Comment