தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்
தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர் நலன் கருதி தேர்வில்லை எனவும் அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்துக்கு என்று தனிக் கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் தமிழகக் கல்வி வாரியத்தையும், மாஹே மாணவர்கள் கேரளக் கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திரக் கல்வி வாரியத்தையும் பின்பற்றிப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கரோனா தொற்றின் 2-வது அலையின் காரணமாக நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியிலும் கரோனா தொற்றுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் மத்திய அரசு சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவித்தது.
இதேபோல் தமிழக அரசும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழகப் பாடத்திட்டத்தைப் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் பின்பற்றிப் பயின்று வருவதால் புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதுச்சேரி, காரைக்காலில் 14,674 மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்தனர். கரோனா தொற்றுப் பரவலால் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடக்காது. மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment