அமைச்சரவை ஒப்புதல்புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிப்போருக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்புகிறோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுடன், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பினார். இதனால், இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. தமிழகம் போல புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.
சுமார் இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநர் தமிழிசையும் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ரங்கசாமியை கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை கேபினட் அறையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் பங்கேற்றனர்.அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் ரங்கசாமி கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரை, ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன்மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் 37, பல் மருத்துவம் 11, கால்நடை 4 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
கடந்த ஆட்சியில் அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அந்தக் கோப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது துணைநிலை ஆளுநர் இந்தக் கோப்புக்கு அனுமதியளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவோம். இம்முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். இந்த ஆண்டே அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பிராந்திய ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
தற்போது மருத்துக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவோம். பின்னர் தொழில்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தொடர்பாக கல்லுாரியில் சேரும்போது அறிவிப்பு வெளியிடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment