4 கலெக்டர்கள், 5 போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 18 அதிகாரிகள் இடமாற்றம்; தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 24, 2016

4 கலெக்டர்கள், 5 போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 18 அதிகாரிகள் இடமாற்றம்; தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

புகார்

இந்த நிலையில், சில மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அரசியல் கட்சியினரிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், சில கட்சிகளுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து புகார் கூறப்பட்ட ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடம் ஏற்பட்டது. ஆனால் தேர்தல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பின்னர் தான் மாநில அரசு அதிகாரிகளை மாற்றம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வரும் என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டியிருந்தது.

18 பேர் மாற்றம்

இந்த நிலையில் தேர்தல் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் வந்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் அரசு கேபிள் டி.வி. நிறுவன நிர்வாக இயக்குனர் மாற்றப்பட்டார்.

இதற்கிடையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினரால் புகார் கூறப்பட்ட அதிகாரிகள் 18 பேர் நேற்றுக்காலை மாற்றம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

4 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

வேலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.நந்தகோபால் மாற்றப்பட்டு அவருக்கு பதில் பூம்புகார் கப்பல் கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த வி.சம்பத் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தொல்பொருள் ஆய்வுத்துறை ஆணையராக பணியாற்றி வரும் டாக்டர் டி.கார்த்திகேயன் முதுநிலை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டி.என்.ஹரிஹரன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழக போக்குவரத்து ஆணையாளராக பணியாற்றி வரும் சத்யபிரதா சாகு முதுநிலை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த என்.வெங்கடாசலம் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார்.

5 போலீஸ் சூப்பிரண்டுகள்

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஜி.சுப்புலட்சுமி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் சென்னை தெற்கு மண்டல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த எஸ்.ராஜேஸ்வரிக்கு பதில் நெல்லை மாநகர பாளையங்கோட்டை சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றி வரும் சந்தோஷ் ஹதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த டாக்டர் ஜே.லோகநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் மதுரை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றி வரும் பாண்டி கங்காதர் நியமிக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த எஸ்.மகேஸ்வரன் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றி வரும் வி.சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஈ.எஸ்.உமா மாற்றப்பட்டு அவருக்கு பதில் கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு துணைகமிஷனராக பணியாற்றி வரும் நிஷா பார்த்தீபன் நியமிக்கப்பட்டார்.

துணை சூப்பிரண்டுகள்

ஆவடி போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நந்தகுமார் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் போதை பொருள் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்திக்கு பதில் கோவை வணிக குற்ற புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு சுரேசும், அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு தனபாலுக்கு பதில் சென்னை மத்திய ரெயில்வே துணை சூப்பிரண்டு எஸ்.ஆரோக்கியமும், வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரத்துக்கு பதில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ஜி.ஹெக்டோ தர்மராஜும், ஒட்டன்சத்திரம் போலீஸ் துணைசூப்பிரண்டாக பணியாற்றி வந்த ராஜாவுக்கு பதில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சி.கபிலன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அதிகாரி மாற்றம்

மேலும் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்த பிரசன்ன ராமசாமி மாற்றப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்த வடிவேல் பிரபு மாற்றப்பட்டார். இவர் விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை புழல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கிளாசன் டேவிட், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோரும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக அளவில்அதிகாரிகள் மாற்றம்

இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது 13 அதிகாரிகள் தான் மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது 8 அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு தான் அதிகபட்சமாக 19 பேர் மாற்றப்பட்டனர். நேற்று முன்தினம் அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனரும், நேற்று 4 மாவட்ட கலெக்டர்கள்., மற்றும் 5 போலீஸ் அதிகாரிகள், 5 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், ஒரு மாவட்ட வருவாய் அதிகாரி, ஒரு கோட்ட வருவாய் அதிகாரி, 2 இன்ஸ்பெக்டர்கள் ஆக மொத்தம் 19 பேர் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த சட்டமன்ற தேர்தலுக்காக மிக அதிகபட்சமாக 19 பேர் மாற்றம் செய்யப்பட்டது இது தான் முதல் தடவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

No comments:

Post a Comment