வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் அலுவலர் நியமனம் செய்ய கோரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 27, 2016

வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் அலுவலர் நியமனம் செய்ய கோரிக்கை

வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமைப்பின் மாநிலச் செயலர்கள் சோ. முருகேசன், மு. மணிமேகலை, மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், தலைவர் பி. ராஜ்குமார், பொருளாளர் சே. சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மு. கருணாகரனிடம் வழங்கினர்.

அதன் விவரம்: வாக்குப்பதிவு மையங்களில் 2ஆம் நிலை அலுவலர், 17ஏ பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், பதிவேட்டில் விடுதல் இன்றி துல்லியமாக பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்பதிவேட்டில், வாக்காளர் வாக்களிக்கப் பயன்படுத்தும் வாக்காளர் அட்டையின் எண்ணை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். வாக்காளரிடம் கையொப்பம் பெற வேண்டும். பதிவேடு முக்கிய ஆவணம் என்பதால் அடித்தல், திருத்தல் மற்றும் தவறுகள் இன்றி கவனமாக பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளரின் விரலில் மையை வைத்துவிட்டு பூத் சிலிப்பில் விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பதிவேட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம், கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் விவரத்தை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

அதேபோல் பதிவான வாக்குகளையும் கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்துப் படிவங்களையும் பூர்த்தி செய்தல், மண்டல அலுவலரிடம் பொருள்களை ஒப்படைத்தல் போன்ற பணியை வாக்குச்சாவடி தலைமை அலுவலருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைமுறை செய்த பிறகு 2ஆம் நிலை அலுவலர்தான், வாக்காளரின் விரலில் மை வைக்கும் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.

எனவே, வாக்குப்பதிவு மையங்களில் 2ஆம் நிலை அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை கருத்தில்கொண்டு கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, ஊதியத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment