வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா?என்ன சொல்கிறது எஸ்.பி.ஐ. அறிக்கை? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 22, 2018

வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா?என்ன சொல்கிறது எஸ்.பி.ஐ. அறிக்கை?

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும்
2018-19ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் என்று ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும், பா.ஜனதா கட்சி தலைமையிலான அரசு தனது கடைசி முழுமையான கடைசி பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது என்பதால், பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 1990-91ம் ஆண்டில் இருந்து பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு வருகிறது. ரூ.22 ஆயிரத்தில் இருந்து, படிப்படியாக உயர்த்தி, 2014-15ம் ஆண்டு ரூ.2.50 லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.) பட்ஜெட்டுக்கு முன் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு மக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆதலால், வருமான வரி விலக்கு உச்சவரம்பை தற்போது இருக்கும் ரூ.2.5 லட்சம் என்பதில் இருந்து ரூ. 50 ஆயிரம் உயர்த்தி, ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம்.
வீட்டுக் கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கும் வட்டி செலுத்துவதி்ல் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது, அதை ரூ.2.50 லட்சமாக உயர்த்தும் பட்சத்தில் ஏறக்குறைய வீட்டு கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயனடைவார்கள். வருமான வரி செலுத்துவதில் இருந்தும் 75 லட்சம் பேருக்கு விலக்கு அளிக்கப்படும். அரசுக்கு இதன் மூலம் ரூ.7,500 கோடி மட்டுமே செலவாகும்.
மேலும் வங்கிகளில் சேமிப்புகள், வைப்புத் தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.லிருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தப்படலாம்.
பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் முழுமையான வளர்ச்சிக்காகவும், மத்திய அரசின் நீண்ட கால, நடுத்தர கால இலக்குகளை அடையவும் உதவும். எங்களி்ன் ஆய்வின் படி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயம், சிறு, குறுந்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment