10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்த
ஆதரவு தெரிவித்த பெரும்பாலான பெற்றோரின் கருத்தறிக்கையை, கோவை மாவட்டக் கல்வித்துறை நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறையிடம் இன்று (ஜன.8) சமர்ப்பித்தது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலோ அல்லது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வுக்குச் சில மாதங்களே உள்ளதால், அதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தலாமா என்று மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்த நவ.16-ம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், நவ.14-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்குப் பின்னர் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி பொங்கல் விடுமுறைக்குப் பின்னர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தலாமா? என்று பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று கடந்த ஜன.4-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெற்றோரிடம் கருத்துக் கேட்புப் படிவம் வழங்கப்பட்டு பெயர், பிள்ளைகளின் பெயர், வகுப்பு, செல்போன் எண், முகவரி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து, பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்ற கருத்தையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன்பின்னர் அந்தப் படிவங்கள் சேகரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'பள்ளிகள் திறப்பது குறித்துப் பெற்றோரின் கருத்துகள் தொகுக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான பெற்றோர்பள்ளிகளைத் திறந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். இணையதள வகுப்பில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்குப் போதிய வசதியில்லாததால், பொதுத்தேர்வு எழுத உள்ள தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர்' என்றனர்.
No comments:
Post a Comment