மற்ற வகுப்புகளை துவங்க பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 26, 2021

மற்ற வகுப்புகளை துவங்க பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை!

 தமிழகம் முழுதும், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு,

நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில், இன்று ஆலோசனை நடக்க உள்ளது

தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதில், தொற்று பாதிப்பு மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.பாதிப்புக்கு உள்ளானோருக்கு, அரசின் விதிமுறைப்படி, மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க, பள்ளி கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளை துவங்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பிப்., 1 முதல் நேரடி வகுப்புகளை துவங்கலாம் என, அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.


இது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார், கமிஷனர் வெங்கடேஷ், பள்ளி கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன், கருப்பசாமி, பழனிசாமி, தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர்.


இந்த கூட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கிய பின் ஏற்பட்ட விளைவுகள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றையும், கொரோனா தாக்கம் இல்லாத நிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.


இதை பின்பற்றி ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்ரவரியில் பள்ளிகளை திறப்பது குறித்து, கருத்துரு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.அந்த அறிக்கை, தலைமைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை செயலர் வழியே முதல்வருக்கு அனுப்பி, ஒப்புதல் பெறப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment