அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 25, 2015

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கூட்டம் ஜுலை 23, 24 தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேலு தலைமையில் ஈரோட்டில் கூடியது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், மாநிலச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன்  மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
இரண்டாம் நாள் கூட்டத்தில்.

தமிழகத்தில் 1200 அரசு பள்ளிகளை மூடுவது என்று அரசு முடிவு எடுத்துள்ளதாக ஆசிரியர் அமைப்பு அறிக்கை விட்டிருந்தது.  இதையொட்டி, அறிக்கை விடுத்த திமுக தலைவர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடப்படும் பள்ளிகளை திறப்போம் என கூறியிருக்கிறார். மாநில அரசு அதிகாரி, அரசு பள்ளிகளை மூடுவதாக வந்த செய்தி தவறானது என்று அறிவித்திருக்கிறார்.

மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள்  ஆகிய பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஒருபகுதி அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது உண்மை. இது பற்றிய தகவலை  மாநில அரசு அறிவிக்க மறுத்து வருகிறது.
மேலும் தற்போது சுமார் 1300 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளது. இப்பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மூடப்படும் அபாயம் உள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், ஒரு பகுதி பள்ளிகள் மூடப்படுவதற்கும் கடந்த காலங்களில் திமுக, அதிமுக தலைமையிலான கல்விக் கொள்கையும், அணுகுமுறையுமே காரணம்.

2001-ம் ஆண்டு மொத்தம் 2,983 மெட்ரிக் பள்ளிகள் இருந்தது. இவற்றில் 11,68,439 மாணவர்கள் பயின்றனர். 2014-ல் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 11,462 ஆக உயர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கை 36,17,473 ஆக அதிகரித்துள்ளது. இக்காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. திமுக, அதிமுக ஆட்சி காலங்களில், தனியார் பள்ளிகளை ஊக்குவித்து அரசுப்பள்ளிகளை புறக்கணித்ததுமே இதற்கு முக்கிய காரணம்.

சென்னை மாநகரத்தில் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை 54 மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. 2006 முதல் 2011ம் ஆண்டு வரை 15 பள்ளிகளும், 2001 முதல் 2006 வரை 39 பள்ளிகளும் மூடப்பட்டு விட்டன. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் சென்னையில் மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில்  பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. ஆனால் விவரங்களை அரசு தர மறுக்கிறது.

அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பிட வசதி, ஆய்வகக் கூடம் ஆகிய அடிப்படை கட்டுமானங்களை ஏற்பாடு  செய்யவதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். தமிழ் பயிற்று மொழியாக ஊக்குவிப்பதுடன், ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்திட வேண்டும். அங்கன்வாடி மையங்களை முன்பருவ பள்ளி 01 (எல்.கே.ஜி) முன்பருவ பள்ளி 02 என்ற முறையில் முழுமையாக அரசு ஏற்று நடத்தி அதை தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்திட ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்திட முடியும். மேலும் ஆசிரியர்களுக்கு உரிய முறையில் பயிற்சியளித்து கல்வித் தரத்தினை உயர்த்திட வேண்டும். குறிப்பாக மாணவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ள 1300 அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்திட அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில்  ஊட்டி வளர்க்கப்பட்டு அரசுப்பள்ளிகளை காவு கொடுக்கும் பல்வகை தனியார் பள்ளிகளின் வணிகமயத்தினை தடுத்து நிறுத்திட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளை பாதுகாத்து ஏழை, எளிய குடும்ப குழந்தைகளின் கல்வி உத்தரவாதம் செய்திட நடவடிக்கை எடுத்திடுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment