இந்தக் கோடைப் பருவத்தில் சராசரி வெப்ப நிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதையடுத்து, வெப்ப அலைகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட்டின் தலைமை வானிலை ஆய்வாளர் ஜி.பி.சர்மா கூறும்போது, “கடந்த ஆண்டில் எவ்வளவு வெப்ப அலைகள் ஏற்பட்டன என்று எண்ணிக்கையில் குறிப்பிட முடியவில்லை, ஆனால் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
அதாவது அதிகபட்ச வெப்ப அளவு 45 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகச் செல்லும் போது வானிலை ஆய்வு மையம் அதனை வெப்ப அலை என்று அறிவிக்கிறது.
வெப்ப அலைகள் அதிகரிக்கிறது என்றால் பொதுச் சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படும் என்று பொருள். கடந்த ஆண்டில் வெப்ப அலைகளுக்கு ஆந்திர மாநிலத்தில் மட்டும் 1,500 பேர் பலியாகியுள்ளனர்.
பிப்ரவரி மாதம் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான செய்தியின் படி, நாடு முழுதும் வெப்ப அலைகள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியிடவுள்ளது.
2016-ம் ஆண்டு கோடை காலத்தில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் இயல்பு நிலைக்கு மீறிய வெப்ப அலைகள் ஏற்படலாம் என்று வியாழனன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நடப்பு ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே இயல்பு நிலை மீறிய வெப்ப அளவுகள் பதிவாகியுள்ளன. அதாவது 1961 முதல் 1990 வரை ஒப்பிடும் போது இந்த இரண்டு மாதங்களில் சராசரி வெப்ப அளவு 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் இடையே அதிகரித்துள்ளது. மேலும் 1901-ம் ஆண்டுக்குப் பிறகு 2015-ம் ஆண்டுதான் 3-வது பெரிய வெப்ப ஆண்டாக திகழ்ந்துள்ளது.
வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதற்குக் காரணமாக, தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பும், பசிபிக் பெருங்கடலின் மேற்புற நீர் வெப்பமடைதலான எல் நினோ விளைவும் கூறப்படுகிறது.
பொதுவாக எல் நினோ விளைவுக்குப் பிறகு வெப்ப அளவு அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டி.எஸ்.பய் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment