கவர்னர் உத்தரவை தொடர்ந்து, புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களிடையே, தேசிய தலைவர்கள் பற்றிய பொது அறிவு குறித்து, சர்வே நடத்தப்பட்டுள்ளது.
நாட்டிற்காக போராடி உயிர் நீத்த தேச தலைவர்களின் தியாகங்கள், பெருமைகள் இளைய
தலைமுறையினருக்கு தெரியாமல் உள்ளது. பல தேச தலைவர்களின் தியாக வரலாறு மாணவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் தெரியாமல் போய்விடுகிறது.
அடிக்கடி உச்சரிக்கப்படும் சில தேசிய தலைவர்கள் பெயர்கள் மட்டுமே அவர்களுக்கு தெரிகிறது.
மறக்கடிப்பட்ட தேசிய தலைவர்கள் குறித்து சர்வே எடுக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதை தொடர்ந்து, பள்ளி கல்வி இயக்கம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அண்மையில் ரகசிய சர்வே எடுத்து முடித்துள்ளது.
25 நகர பள்ளிகள், 25 கிராமப்புற பள்ளிகள் என மொத்தம் 50 அரசு பள்ளிகளில் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.தேசிய தலைவர்களின் புகைப்படம், அவர்களுடைய புனை பெயர், தலைவர்களின் பெயரிலான நிகழ்ச்சிகள் குறித்து மாணவர்களிடம் வினாத்தாள் வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டு, சோதிக்கப்பட்டது.
6,7,8 ஆகிய நடுநிலை வகுப்பு மாணவர்களிடம் பத்து வினாக்களும், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு 15 கேள்விகளும் கேட்கப்பட்டு சர்வே எடுக்கப்பட்டது. பள்ளி கல்வித் துறை இயக்குனர் குமார் உத்தரவின்பேரில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சேர்ந்த 14 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நேரடியாக களத்தில் இறங்கி மாணவர்களின் பொது அறிவினை கேட்டறிந்துள்ளனர்.
ரிசல்ட் எப்போது?
நடுநிலை பள்ளிகளில் 7,754 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 6, 761 மாணவர்கள் என, மொத்தம் 14,515 மாணவர்களிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விடைகள் டேட்டா என்ட்ரி செய்யப்பட்டு வருகிறது.
வரும் 28ம் தேதி மாணவர்களின் பொது அறிவு குறித்த சர்வே பள்ளி கல்வித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன் பிறகே, தேசிய தலைவர்கள் பற்றிய பொது அறிவில் நமது புதுச்சேரி மாணவர்கள் தேர்ச்சியா அல்லது தோல்வியா என்பது தெரிய வரும்.
புது முடிவு:
சர்வே முடிவுகள் எப்படி இருந்தாலும் அரசு பள்ளி மாணவர்களிடையே தேசிய தலைவர்களின் புரிதலை அதிகரிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக 17 தேசிய தலைவர்கள் பற்றிய விபரங்களை நுால் வடிவில் தகவல் தொகுப்பாக தொகுத்து பள்ளி மாணவர்களிடம் வினியோகிக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்ததாக பள்ளி காலை அணிவகுப்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டு தேசிய தலைவர்கள் பற்றி அறிமுகம் செய்து உரையாற்ற உத்தரவிடவும் தயாராகி வருகிறது
No comments:
Post a Comment