கடந்த மூன்று நிதியாண்டுகளில், வருமான வரித் துறை மேற்கொண்ட சோதனைகளில், கல்வி நிறுவனங்களிலும் மனை வணிகம் உள்ளிட்ட துறைகளிலும் ரூ.32,000 கோடிக்கு அதிகமான
கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் வருமான வரித் துறை நடத்திய 445 சோதனைகளில், ரூ.11,066 கோடி கருப்புப் பணம் கண்டறியப்பட்டது. மேலும், ரூ.712.68 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், 2014-15-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட 545 சோதனைகளில் ரூ.10,288 கோடி கருப்புப் பணம் கண்டறியப்பட்டது; ரூ.761.70 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2013-14-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட 569 சோதனைகளில் ரூ.10,791.63 கோடி கருப்புப் பணம் வெளிச்சத்துக்கு வந்தது; ரூ.807.84 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமாக, ரூ.32,146 கோடி கருப்புப் பணம் கண்டறியப்பட்டது. மனை வணிகம், நிதித் துறை, வர்த்தகம், உற்பத்தி, கல்வி நிறுவனங்கள், சேவைகள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களிடம் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று சந்தோஷ் குமார் கங்க்வார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment