78 மையங்களில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: 2 வாரத்தில் முடிக்க ஏற்பாடு.
தமிழகம் முழுவதும் 78 மையங்களில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை 2வார காலத்தில் முடிக்க அரசு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர்.
தேர்வுகள் 28-ம் தேதி முடிவடைந்தது. மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு 30-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 78 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முதல் நாளன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் விடைத்தாள்களைமதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) முதல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய இதர விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கும். எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
எனவே, 2 வாரத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணியை முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இதர பணிகளை செய்ய அரசு தேர்வுத் துறையினர் திட்டமிட் டுள்ளனர்.அதே வேளையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியும் விரைவில் பல்வேறு மையங்களில் தொடங்க உள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment