8.47 லட்சம் கார்டுதாரர்களுக்கு35 ஆயிரம் பேருக்கு மட்டுமே வந்துள்ளது: 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்குமா - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 5, 2017

8.47 லட்சம் கார்டுதாரர்களுக்கு35 ஆயிரம் பேருக்கு மட்டுமே வந்துள்ளது: 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்குமா

மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக வடக்கு தாலுகாவிலுள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு மட்டும் 35 ஆயிரம் 'ஸ்மார்ட் கார்டுகள்' வந்துள்ளன. அவற்றை விநியோகிக்கும் பணி தற்போது நடக்கும் நிலையில் மற்ற பகுதியினருக்கு கார்டுகள் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உணவு,பொது விநியோக துறை மூலம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரிசி, சீனி, கோதுமை உட்பட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் முறைகேடுகளை களையும் வகையில் நீண்ட இழுபறிக்கு பிறகு 'ஸ்மார்ட் கார்டுகள்' தற்போது வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 40 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டும் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படுகின்றன. இப்பணியை ஏப்., 1ம் தேதி கலெக்டர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக வழங்க 35 ஆயிரத்து 149 'ஸ்மார்ட் கார்டுகள்' மட்டுமே வந்துள்ளன. வடக்கு தாலுகாவில் 219 ரேஷன்கடைகள் மூலம் அவற்றை வழங்கும் பணி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவா மேற்பார்வையில் நடக்கிறது.
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 30 சதவீத கார்டுதாரர்களுக்கு வழங்கும் வகையில் மட்டுமே ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. இந்த கார்டுகளை வாங்கியதும் அதை ரேஷன் கடையிலுள்ள 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் மூலம் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதில் சில கார்டுகளை 'ஸ்வைப்' செய்ய முடியவில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். சில கார்டுகளில் குடும்பத் தலைவர் படம் மாறியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மற்ற தாலுகாவில் எப்போது 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படும் எனவும் நுகர்வோர் கேள்வி எழுப்புகின்றனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறியதாவது: ஆதார், அலைபேசி எண்கள் பதிவு செய்த அனைவருக்கும் 'ஸ்மார்ட் கார்டுகள்' அரசிடமிருந்து வர வர வழங்கப்படும். முதற்கட்டமாக வந்த கார்டுகள் மட்டும் வடக்கு தாலுகாவிற்குட்பட்ட கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 'ஸ்மார்ட் கார்டுகளை' வழங்கியதும் அதை 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் மூலம் பதிவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர விற்பனையாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் ஆதார், அலைபேசி எண்களை பதிவு செய்திருந்தாலே போதும். அவர்களுக்கும் கார்டுகள் வழங்கப்படும்.
சில கார்டுதாரர்கள் நிரந்தர போன் எண்களை பதிவு செய்யாமல் முன்பு வைத்திருந்த எண்களை பதிவு செய்துள்ளனர். இதனால் சில கார்டுகளில் போன் எண்கள் மாறியிருக்கலாம். நிரந்தர போன் எண்களை தற்போது பதிவு செய்யலாம். 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்குவதால் தற்போது ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம் செய்வது போன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வார இறுதிக்குள் மற்ற பகுதியினருக்கு தேவையான கார்டுகள் வந்து விடும். 'ஸ்மார்ட் கார்டுகள்' வந்ததும் நுகர்வோர் அலைபேசிக்கு எட்டு இலக்க எண் (ஓ.டி.பி.,) குறுந்தகவலாக அனுப்பப்படும். அதை அழிக்காமல் சம்பந்தப்பட்ட ரேஷன்கடைகளில் காட்டி கார்டு பெறலாம். ஆனால் சில நுகர்வோர் அந்த எண்களை அழித்து விடுகின்றனர். இருப்பினும் அவர்களது பெயர், முகவரியை வைத்து கார்டு வழங்கப்படுகின்றன, என்றார்.
குடும்ப மூத்த பெண்உறுப்பினரின் படம்
மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்படி 20 கிலோ அரிசி பெறுவோரது கார்டுகளில் குடும்ப மூத்த பெண் உறுப்பினர் படத்தை அச்சிடும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அரிசி பெறுவோரது குடும்பத்திலுள்ள மூத்த பெண் உறுப்பினர் படங்கள் 'ஸ்மார்ட் கார்டில்' இடம் பெற்றுள்ளன. இதில் குளறுபடிகள் நடக்கவில்லை. மற்ற கார்டுகளில் குடும்பத்தலைவரின் படங்கள் 'ஸ்மார்ட் கார்டில்' இடம் பெற்றுள்ளன என வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment