விழுப்புரம் விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள அத்தியூர் திருக்கை கிராம உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்த உத்தரவிடக் கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் வழக்கு தொடர்ந்தார். இந்த பொது நல மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தங்கள் கிராமத்தில் நான்கரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் அளித்த விளக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த விதிகளின்படி, போதுமான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. மாணவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்துவதற்கான நிபந்தனைகளை இப்பள்ளி பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் வேறு மேல்நிலைப் பள்ளிகள் இருக்கக் கூடாது என விதிகள் உள்ளதாகவும், ஆனால் ஏற்கெனவே அப்பகுதியில் மூன்று பள்ளிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 20 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி, பள்ளியை தரம் உயர்த்த அரசு மறுப்பது சரியல்ல என தெரிவித்ததுடன், இந்த 20 ஆண்டுகளில் கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பள்ளிகளை தரம் உயர்த்தும் விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், பள்ளிகளுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசுதான் என்றும், தேவையான வசதிகளை ஏற்படுத்தினால், மாணவர்கள் எண்ணிக்கை தானாக உயரும் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் பங்களிப்பை ஏற்று, கூடுதல் நிதியை ஒதுக்கி அத்தியூர் திருக்கை கிராம உயர்நிலைப் பள்ளியை வரும் ஆண்டில் தரம் உயர்த்த தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment