TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 10, 2018

TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெயிட்டேஜ் முறையில்தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர் நிலை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதற்காக அந்தக் குழுவானது, அண்மையில் கூடியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி., எஸ்.சி., எஸ்.டி.,) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடர்ந்து கடைபிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை இருப்பதால்அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.

இதன்படி, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் ஏற்படாது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது அவசியம் அற்றதாக கருதப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்களின்மீது நடவடிக்கைகள் ஏற்படுவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார்.

இந்தத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பாக அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

No comments:

Post a Comment