சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை 100 சதவீதம் எட்ட, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை ஓட்டுப்பதிவு வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென, ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள, தேர்தல்
விழிப்புணர்வு பார்வையாளர் சுபா குப்தா தலைமையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ஒவ்வொரு தொகுதியிலும், மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு பணி, மாதிரி ஓட்டுச்சாவடி அமைத்தல் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
அதன்பின், மாவட்டத்திலுள்ள அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும், வாக்காளர்களிடையே ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துதல் மற்றும் ஓட்டளிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான பேனர்கள் வைக்க வேண்டும்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மாவட்டத்தில் சராசரியை விட குறைவாக ஓட்டுப்பதினான ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில், வரும் தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நாள் வரையிலும், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென, பார்வையாளர் சுபா குப்தா அறிவுறுத்தினார்.
கோவை தெற்கு மற்றும் தொண்டாமுத்துார் தொகுதிகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பார்வையாளர் ஆய்வு செய்தார். பேரூர் தாலுகா அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தை ஆய்வு செய்தார்.
மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, சாடிவயல் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் நடந்த, மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அந்த நிகழ்ச்சியில், தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டுமென, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள, வாக்காளர் சேவை மையத்தில், படிவங்கள் தினமும் எவ்வளவு பெறப்படுகிறது, வாக்காளர் அடையாள அட்டைக்கு எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது என்று விசாரித்தார். அதன்பின், நடமாடும் வாக்காளர் சேவை மைய வாகனத்தை பார்வையிட்டு, நான்கு தேர்தல் பிரசார வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அந்த வாகனத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கு, ஆன் - லைனில் பதிவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலரான துணை கமிஷனர் காந்திமதி விளக்கமளித்தார்.
அதன்பின், ஒப்பணக்கார வீதி மேல்நிலைப்பள்ளி, வடகோவை மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஓட்டுச்சாவடிகளை பார்வையாளர் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment