பெரும் மாசு மண்டலத்தில் தலைநகர் டெல்லி ஆழ்ந்து வருகிறது, இதற்கு எதிராக அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய குழு மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பிய போது, “காற்றில் தூசியும் மாசும் அதிகரித்தால் முதலில் பள்ளிகள் மூடப்படும், இது மேலும் அபாயமடையும் போது கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை நிறுத்தப்படும், இது மேன்மேலும் அபாயகட்டத்தை எட்டும் போது தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள் முடக்கப்படும், அது மேலும் படுமோசமடையும் போது ஒட்டுமொத்த நகரமுமே முடக்கப்படும்.
இந்த அளவுக்கு காற்றில் மாசு விவகாரம் முற்றுவதற்கு முன்பாக மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் இதற்கு தீர்வு இருக்கிறதா?” என்றனர்.
நீதிபதி ஏ.கே.சிக்ரி, காற்றில் மாசு அதிகம் சேர்ந்ததன் காரணமாக சிங்கப்பூர், பெய்ஜிங் நகரங்கள் முடக்கப்பட்டன, இதுதான் டெல்லியின் நிலையுமா? என்றார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மக்கள் கடும் எச்சரிக்கையையும் மீறி பட்டாசு, மத்தாப்புகளை கொளுத்துவதை சுட்டிக்காட்டிய இவர் மேலும் கூறும்போது, “மதவிழாக்கள் என்ற பெயரில் மற்றவர்களை ‘கொல்வதை’நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்றார்.
நீதிமன்ற அதிகாரி குமார், தடையற்ற வணிகமயமாக்கம் தொழிற்சாலை உருவாக்கங்கள் ஆகியவையே டெல்லியை நச்சு நகரமாக மாற்றியுள்ளது என்றார்.
“இந்த நீதிமன்றத்தின் அதிகாரியாக நான் கூறவிரும்புவதெல்லாம், வரம்புக்குட்பட்ட நில-குடியிருப்புப் பயன்பாடுகள் இல்லை, குடியிருப்பும், தொழிற்கூடங்கள், வணிக நலன்கள் இணைந்து செயல்படுகின்றன. வாகன நிறுத்துமிடம் இல்லை. கட்டுமானங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டே வருகிறது. கார்கள் இஞ்ஜின்கள் கூட ஆஃப் செய்யப்படாமல் இயங்கிய நிலையில் வைக்கப்படுகின்றன இதனால் நச்சுக் கரியமிலவாயு வெளியாகிறது.
இதற்குப் பதிலளித்த டி.எஸ்.தாக்குர், “அரசு ஒரு முறையான திட்டம் வகுக்க வேண்டும் என்பதே இதில் இறுதியான முடிவாகும்” என்றார்.
மேலும் டெல்லி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை கிடப்பில் போட்டது என்று சாடிய டி.எஸ்.தாக்குர், டெல்லி மாநில அரசு தனது கடமைகளையும் செய்யாது, எங்கள் உத்தரவுகளையும் கிடப்பில் போட்டுள்ளது என்றார்.
ஒரு நாள் சென்று இதற்கு உத்தரவு பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்தி வைத்தது.
No comments:
Post a Comment