காற்றுமாசு கடுமையாக சூழ்ந்ததால் அடியோடு முடங்கியது டெல்லி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 7, 2016

காற்றுமாசு கடுமையாக சூழ்ந்ததால் அடியோடு முடங்கியது டெல்லி

காற்று மாசு கடுமையாக சூழ்ந்துள்ளதால் தலைநகர் டெல்லி அடியோடு முடங்கியது; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது.
டெல்லியில் ஏற்பட்ட கடும் புகை மூட்டம் நான்காவது நாளாக நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது; விடுமுறை தினமாக இருந்தாலும் மக்கள் வெளியே வர  முடியவில்லை. பஸ்களும் பல இடங்களில் நிறுத்தப்பட்டன. சில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் புகை மூட்டம் காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை.
அரியானாவில், புகை மூட்டம் காரணமாக ஏற்பட்ட பார்வைக் குறைவினால், அடுத்தடுத்து வந்த 70 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாசு பாதிப்பு காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர். சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட நோயாளிகள் வரத்து அதிகரித்து இருப்பதாக டெல்லி மருத்துவமனைகள் தெரிவித்து உள்ளன.

காரணம் என்ன: இதற்கிடையே, காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது. கூட்டம் முடிந்த பின்னர் கெஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாப், அரியானா மாநிலத்தில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியை அடர்த்தியான போர்வையாக புகை சூழ்ந்துள்ளது. கடந்தாண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பயிர் கழிவுகளால் எழுந்துள்ள புகை அதிகளவில் உள்ளது. இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இன்று முதல் புதன் கிழமை வரை 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளோம். அடுத்த 5 நாட்களுக்கு கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகள் அனைத்தையும் நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் புழுதி பறப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாலைகளில் இன்று முதல் தண்ணீர் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிலக்கரி எரிப்பதால் வெளியாகும் மாசு, டெல்லியை தாக்குகிறது என ஏற்கனவே குற்றச்சாட்டு நிலவுகிறது. எனவே, மாசு ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான, பதர்பூர் அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை அடுத்த 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மாசு நிலைமையை அனுசரித்து, வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காற்று உறிஞ்சும் கருவி (வேக்குவம் கிளீனர்) மூலமாக 10ம் தேதியில் இருந்து சாலைகளில் துப்புரவு பணிகள் நடத்தப்படும். மின்சார தேவைக்காக டீசல் ஜெனரேட்டர்கள் இயக்குவதை, அடுத்த 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளேன். அதில், மருத்துவமனை, செல்போன் கோபுரங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். திறந்தவெளி மற்றும் குப்பை கிடங்குகளில் குப்பை எரிப்பதை உடனடியாக அணைக்கும்படி மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தபப்ட்டு உள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார். மாஸ்க் விற்பனை அதிகரிப்பு: காற்று மாசுவினால் டெல்லியில் முகமூடி (மாஸ்க்) விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. பல கடைகளில் மாஸ்க் தீர்ந்துவிட்டதால், அவற்றில் ஸ்டாக் இல்லை என்ற போர்டு தொங்கிறது. இதனால் ஆன்லைனில் இவற்றை வாங்க மக்கள் போட்டி போடுகின்றனர். இதனால் இவற்றின் விலை சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. பல இடங்களில் 5 ரூபாய்க்கான சாதாரண மாஸ்க் கூட, ரூ.15க்கு விற்கப்படுகிறது.

No comments:

Post a Comment