மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாததால் 22 கல்லூரிகளை மூடுவதற்கு நிர்வாகம் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 584 கல்லூரிகள் உள்ளன.
தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும் 554 செயல்படுகின்றன. இவற்றில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 861 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் நிரம்புவது இல்லை.
கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
என்ஜினீயரிங் படிப்பு மீதுள்ள மோகம் குறைந்ததால் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை.
சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட கல்லூரிகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை புறக்கணித்தனர். இதனால் அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் காலியாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் சேராமலும் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அக்கல்லூரிகளை மூடுவதற்கு நிர்வாகம் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது.
கல்லூரிகளை தொடர்ந்து நடத்த போதுமான மாணவர்கள் இல்லாததால் நிதிச்சுமையால் நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. அதனால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஏ.ஐ.சி.டி.இ. தரப்பில் கூறும்போது, “22 தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுப்பதகவும் தெரிவித்துள்ளது.
இந்த 22 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் இந்த ஆண்டு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்காது என்றும் ஏ.ஐ.சி.டி.யு. தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தனியார் பொறியியல் கல்லூரிகள் சிலவற்றை மூடுவதற்காக கடந்த 2 வருடத்திற்கு முன்பே விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் 22 பொறியியல் கல்லூரிகளும் ஒரு கட்டிடக் தொழில்நுட்ப கல்லூரியும் இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்காது என்று ஏ.ஐ.சி.டி.இ. தரப்பில் கூறப்படுகிறது.
மூடப்படுகின்ற பொறியியல் கல்லூரிகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ரூ. 25 கோடி முதல் ரூ.300 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூகுல் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் பொறியியல் கல்லூரிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தரப்பில் கூறும்போது, 3 கல்லூரிகளை மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒரு கல்லூரிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு படித்த மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டனர் என்றனர்.
No comments:
Post a Comment