தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் வசதியை 'ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ' என்ற நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சவீதா மருத்துவமனை மற்றும்
பல்கலைக்கழகத்தில் அவசர காலத்தில் பயன்படுத்த இந்த சேவையை புதன்கிழமை (ஏப்ரல் 5) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து சவீதா பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் ஏன்.எம்.வீரையன் கூறுகையில், நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படும் நேரத்தில் நோயாளிகளுக்கு அதிகளவில் பாதிப்பும், ஒருசில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. தற்போது ஏற்படுத்தியுள்ள ஏர் ஆம்புலன்ஸ் வசதியால் குறுகிய காலத்துக்குள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற முடியும், உயிரையும் காப்பற்ற முடியும். மேலும் ஏர் ஆம்புலன்ஸில் அளிக்கப்படும் சிகிச்சையை மருத்துவமனையிலிருந்தே கண்காணிக்கும் வசதி உள்ளது. உறுப்புகள் தானத்தை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் முதன்முறையாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலேயே ஏர் ஆம்புலன்ஸ் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சவீதா மருத்துவமனை சார்பில் ஒரு லட்சம் பேருக்கு 'சிபிஆர்' (உயிர்காக்கும் இதய-நுரையீரல் முதலுதவி சிகிச்சை) பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ இயக்குநர் கேப்டன் அருண் சர்மா கூறுகையில், தற்போது ஏர் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற ரூ.4 லட்சம் வரை செலவாகும். அதனால், ஆண்டுக்கு ரூ.18,000 செலுத்தினால் குடும்பத்திலுள்ள நான்கு உறுப்பினர்கள் பலன்பெறும்வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்மூலம் ஏழை, எளிய மக்களும் ஏர் ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment