நீட் தேர்வுக்கான தர வரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிடாது - மதுரை ஐகோர்ட்டில் உறுதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 27, 2018

நீட் தேர்வுக்கான தர வரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிடாது - மதுரை ஐகோர்ட்டில் உறுதி

நீட் தேர்வுக்கான தர வரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிடாது - மதுரை ஐகோர்ட்டில் உறுதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்வழி வினாத்தாளை தேர்வு செய்து தேர்வு எழுதினர்.
தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தன. 50,75,77,82 ஆகிய எண் வினாக்கள் உள்பட 49 கேள்விகள் தவறாக இருந்தன.
எனவே அந்த கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினேன்.
மேலும் எந்தெந்த வினாக்கள் தவறு என தனித்தனியாக குறிப்பிட்டு பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால் எனது மனு பரிசீலிக்கப்படாமல் கடந்த 24-ந் தேதி நீட் தேர்வு விடைத்தாள் வெளியிடப்பட்டது.
எனவே 49 கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கவும், அதுவரை நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு கடந்த 4-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை வழக்கமான பட்டியல் இடப்பட்டு முறையாக விசாரிக்கப்படும் என்றனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தமிழ்மொழி பெயர்ப்பில் பல கேள்விகளில் குளறுபடிகள் இருந்ததாகவும், அதே வினாத்தாளை ஆங்கிலத்தில் இருந்து மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கும்போது குளறுபடிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பீகாரில் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 35 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு பிழையினால் தான் தமிழில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்றும் மனுதாரர் தரப்பு வக்கீல் வாதாடினார்.
அதற்கு மத்திய அரசு தரப்பில் வாதாடிய வக்கீல், மொழி பெயர்ப்பில் சில தவறுகள் இருக்கத்தான் செய்யும் என்றும், நீட் தேர்வு தர வரிசை பட்டியலை தற்போதைக்கு உடனடியாக அரசு வெளியிடாது என்றும் உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment